முதியவர் எடுத்த விபரீத முடிவு.. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் காரணமா..?

சட்டவிரோதமாக குடியேறியவராக தான் அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.;

Update:2026-01-09 07:42 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கை குறித்து ஏற்பட்ட அச்சம், மாநிலம் முழுவதும் மக்களிடையே மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீசால் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு பால்(வயது 64). இவரது பெயர், அம்மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில் நேற்று அவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்தல் ஆணையத்தின் நோட்டீசை பெற்றுக்கொண்டதில் இருந்து அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவராக அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இருந்தபோதிலும், உண்மையிலே தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவர் இறந்து போனாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்