லாலுபிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி கோர்ட்டு உத்தரவு
லஞ்சம் பெற்ற வழக்கில் லாலுபிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே வேலை அளிக்க சிலரிடம் நிலம் லஞ்சமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரி தேவி மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. லாலுபிரசாத் யாதவ், அவருடைய குடும்பத்தினர், மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றங்களை செய்வதற்கு ரெயில்வே அமைச்சகத்தை லாலுபிரசாத் தனது தனிப்பட்ட சாம்ராஜ்யமாக பயன்படுத்தியதாகவும், அரசு வேலையை நிலம் வாங்குவதற்கு பேரம் பேசுவதற்கான ஆயுதமாக பயன்படுத்தியதாகவும் நீதிபதி கூறினார். லாலுவும், மற்றவர்களும் நிலத்தை பறிக்க குற்றவியல் கூடாரம் நடத்தியதாக கூறிய நீதிபதி, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.