மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி கொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-09 22:42 IST

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே உள்ள தலாயி பகுதியை சேர்ந்தவர் லதேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிராந்திய செயலாளராக இருந்தார். இதற்கிடையே கடந்த 31.12.2008 அன்று சாக்கியத்துமுக்கு பகுதியில் அவர் தனது நண்பர்களான மோகன்லால், சந்தோஷ், சுரேஷ், மஜீத் ஆகியோருடன் நின்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது சாக்கியத்துமுக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 12 பேர் அடங்கிய கும்பல் லதேஷின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்றது. அதை தடுக்க முயன்ற அவர்களது நண்பர்களும் தாக்கப்பட்டனர். காப்பாற்ற முயன்ற மீனவர்கள் மீது வெடிகுண்டுகளை கும்பல் வீசி விட்டு தப்பியது.

இதுகுறித்து தலச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த 7 பேர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தலச்சேரி மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்றது. 64 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த தலாயி பகுதியை சேர்ந்த சுமித் என்கிற குட்டன் (வயது 38), பிரகீஷ் பாபு (46), நிதின் (37), சனல் (36), சிமி ஜோஸ் (42), சஜீஷ் (37), ஜெயேஷ், (39) ஆகிய 7 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விமல் தீர்ப்பளித்தார். வழக்கு விசாரணையின் போது அஜித்குமார் என்பவர் இறந்து விட்டார்.

மேலும் சந்தோஷ் குமார் (51), சரத், (37), சனீஸ் பாபு (48), பா.ஜனதா முன்னாள் கவுன்சிலரான அஜீத் (42) ஆகிய 4 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவர்களை கோர்ட்டு விடுதலை செய்தது. இந்த வழக்கில் அரசு வக்கீல்கள் வர்கீஸ், சத்யன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்