குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்.. தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்
தீயணைப்பு வீரர்கள், சாமர்த்தியமாக பாத்திரத்தை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாழக்காடு அருகே உள்ள செருவாயூர் பகுதியை சேர்ந்தவர் ஜிஜி லால். இவருடைய மனைவி அதுல்யா. இவர்களது மகன் அன்விக்லால் (வயது 2½). இந்த குழந்தை தனது தாத்தா உடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தது. பின்னர் பேரன் விளையாடுவதற்காக, விளையாட்டு பொருட்களை எடுக்க தாத்தா வீட்டுக்குள் சென்றிருந்தார். அப்போது குழந்தை அலுமினிய பாத்திரத்தை எடுத்து தலையில் கவிழ்த்து விளையாடியது.
அந்த சமயத்தில் குழந்தை தலையில் பாத்திரம் சிக்கி கொண்டது. இதனால் குழந்தை பயத்தில் கதறி அழுதது. உடனே குடும்பத்தினர் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை பலமுறை அகற்ற முயன்றும் முடியவில்லை. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் குழந்தையை அப்படியே முக்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தூக்கி கொண்டு சென்றனர்.
அங்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் கபூர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சாமர்த்தியமாக பாத்திரத்தை வெட்டி அகற்றி குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் குழந்தைக்கு தீயணைப்பு வீரர்கள் இனிப்பு வழங்கினர். குழந்தையை மீட்ட தீயணைப்பு துறைக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.