‘விண்வெளித் துறையில் புதிய மைல்கற்களை அடைவது இந்திய விஞ்ஞானிகளின் இயல்பாகிவிட்டது’ - பிரதமர் மோடி
தீவிரமான விண்வெளி ஆய்வுப் பணிக்கு விஞ்ஞானிகள் தயாராக வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ந்தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) அனுப்பிய ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதன் மூலம், நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு மற்றும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமைகளை இந்தியா பெற்றது.
இதையடுத்து, ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ந்தேதி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“தேசிய விண்வெளி தினம் நமது இளைஞர்களிடையே உற்சாகத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். விண்வெளித் துறையில் ஒன்றன் பின் ஒன்றாக புதிய மைல்கற்களை அடைவது இந்தியா மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் இயல்பாகிவிட்டது.
2 ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் தென் துருவத்தை அடைந்து வரலாறு படைத்த முதல் நாடாக இந்தியா ஆனது. விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் திறனைக் கொண்ட உலகின் 4-வது நாடாகவும் மாறிவிட்டோம். சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார். அவரை 3 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் அவர் பெருமைப்படுத்தினார்.
விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் ககன்யான் திட்டத்துடன் இந்தியா மேலும் உயரும். வரும் காலங்களில் இந்தியா அதன் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும். நாம் நிலவையும், செவ்வாய் கிரகத்தையும் அடைந்துவிட்டோம். இப்போது, மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் பல ரகசியங்கள் மறைந்திருக்கும் ஆழமான விண்வெளியை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
தீவிரமான விண்வெளி ஆய்வுப் பணிக்குத் தயாராகுமாறு விஞ்ஞானிகளை கேட்டுக் கொள்கிறேன். விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய நிலையை நாம் அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.