பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது;
அங்காரா,
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனிடையே, பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் உயிரிழந்தனர். பின்னர், கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது. பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு தலிபான்கள் பொறுப்பேற்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிபந்தனையை தலிபான்கள் ஏற்க மறுத்தனர். இதனால் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தபோதும் சண்டை நிறுத்தம் தற்போதுவரை அமலில் இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளது.