அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; வி.ஐ.பி. ஆடியோ பற்றி விசாரிக்கப்படும்: முதல்-மந்திரி தமி உறுதி
ஆடியோ முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்து வகை விசாரணைகளும் நடைபெறும் என முதல்-மந்திரி தமி உறுதி கூறினார்.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பவ்ரி ஹர்க்வல் மாவட்டத்தின் ரிஷிகேஷ் அருகே 'வனந்த்ரா' என்ற சொகுசு விடுதியில் பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி (வயது 19) என்ற இளம்பெண் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தேடி வந்தனர். விசாரணையின்போது இளம் பெண் வரவேற்பாளர் அங்கிதாவை விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது.
அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த அங்கிதாவை, ஆத்திரத்தில் விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யா கொலை செய்து கால்வாயில் வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அங்கிதா கொலையை தொடர்ந்து புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தள்ள மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில் விடுதியின் குறிப்பிட்ட சட்டவிரோத இடத்தில் அமைந்த பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.
அப்போது பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மாநில மந்திரியாக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா. அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி கட்சி உத்தரவிட்டது. புல்கிட் ஆர்யாவின் சகோதரனான அங்கித் ஆர்யாவைம் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. புல்கிட் ஆர்யா உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வி.ஐ.பி. ஒருவருக்கு பாலியல் சேவை செய்ய வற்புறுத்துகின்றனர் என அங்கிதா பேசிய பேச்சுகள் அப்போது சர்ச்சையாகி இருந்தன.
இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வழக்கில், வி.ஐ.பி.க்கு தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில், அது யார் என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான ஆடியோ பதிவு ஒன்றும் வெளிவந்து வைரலாகி வருகிறது.
இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி இன்று கூறும்போது, அரசின் பணிகளை தடுக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. யாரையும் தடுத்து விட முடியாது என்றார். தொடர்ந்து அவர், வினாத்தாள் கசிவு தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ஆடியோ பதிவு ஒன்று வெளிவந்தது. தற்போது, மற்றொரு ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது.
இது சதி திட்டம் என உங்களுக்கு தோன்றவில்லையா? என கேட்டார். இது உணர்வுப்பூர்வம் வாய்ந்த விவகாரம். சம்பவம் பற்றி அறிந்ததும், காவல் துறைக்கு உத்தரவிட்டு உடனடியாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆடியோ பதிவில் நிறைய பெயர்கள் உள்ளன. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆடியோ முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்து வகை விசாரணைகளும் நடைபெறும் என்றார்.
யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால், அவர்கள் தப்ப முடியாது. இதுவே எங்களுடைய அரசின் சாதனையாக கடந்த காலத்தில் பதிவாகி உள்ளது என கூறினார். குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என்று அப்போது அவர் கூறினார்.