விருந்து நிகழ்ச்சியில் வாக்குவாதம்; நண்பரின் காதை கடித்து விழுங்கிய வாலிபர்

நண்பரின் காதை வாலிபர் ஒருவர் கடித்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-03-01 01:44 IST

மும்பை,

மும்பையை அடுத்த தானே, காசர்வடவிலி பகுதியில் உள்ள பட்லிபாடாவில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ஷரவன் லீகா (வயது37). இவரது நண்பர் விகாஸ் மேனன்(32). இருவரும் தனது சக நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஷரவன் லீகாவுக்கும், விகாஸ் மேனனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விகாஸ் மேனன் திடீரென நண்பரின் காதை கடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் ஷரவன் லீகா கதறினார்.

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அவர் நண்பரின் காதை இன்னும் அழுத்தமாக கடித்தார். இதில் ஷரவன் லீகாவின் காதின் ஒரு பகுதி துண்டானது. துளியும் யோசிக்காத விகாஸ் மேனன் மனித மாமிசம் தின்பவரை போல துண்டான காதை மென்று விழுங்கி விட்டார்.

இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். காதை இழந்து துடித்த ஷரவன் லீகாவை மற்ற நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விகாஸ் மேனன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்