நடத்தையில் சந்தேகம்... கணவரின் துன்புறுத்தலால் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு

லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.;

Update:2025-12-26 08:52 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ெநலமங்களா தாலுகா பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லசந்திரா பகுதியை சேர்ந்தவர் லிகித் சிம்ஹா. இவருக்கும் நாகமங்களாவை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 26) என்பவருக்கும் கடந்த மாதம் (நவம்பர்) இறுதியில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லசந்திராவில் வசித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து ஒரு மாத காலங்கள் கூட ஆகாத நிலையில் லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அவர் ஐஸ்வர்யாவை அடித்து, உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்புகொண்டு தெரிவித்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில், ஐஸ்வர்யாவின் பெற்றோர் மல்லசந்திராவுக்கு வந்து லிகித் சிம்ஹாவிடம் சமரசம் பேசி சண்டையை முடித்து வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பின்பு மீண்டும் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா, கணவர் வெளியில் சென்றதும், தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த லிகித் சிம்ஹா, மனைவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுகுறித்து ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.

இதையடுத்து மல்லசந்திராவுக்கு விரைந்து வந்த அவர்கள், ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஐஸ்வர்யாவின் பெற்றோர், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, லிகித் சிம்ஹாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்