திருநங்கைகள் போல வேடமிட்டு குழந்தைகளை கடத்த முயற்சி: 4 பேர் கைது
மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 4 குழந்தைகளையும் கடத்த முயற்சி செய்தனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் தாலுகா குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 3 சிறுமிகள், ஒரு சிறுவன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 திருநங்கைகள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி 4 குழந்தைகளையும் கடத்த முயற்சி செய்தனர். இதனால் பயந்துபோன குழந்தைகள் உதவிகேட்டு சத்தம்போட்டுள்ளனர்.
சத்தம்கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட 3 பேரும் திருநங்கைகள் போல வேடம் போட்டு குழந்தைகளை கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.