‘இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்’ - ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் கருத்து
சூரிய நமஸ்காரம் செய்தால் தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம் என தத்தாத்ரேயா தெரிவித்தார்.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் சாண்ட் கபீர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹோசாபலே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
“இஸ்லாமியர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வதால் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? அவர்கள் மசூதிக்கு செல்வதை யாரும் தடுக்கப்போவதில்லை. நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவரையும் உள்ளடக்கியது.
சூரிய நமஸ்காரம் என்பது யோகாசன முத்திரைகளை கொண்ட, விஞ்ஞானப்பூர்வமான மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பயிற்சி. தொழுகை செய்பவர்கள் பிராணாயாமம் செய்தால் அது தவறா? நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்தால், தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.
மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவர்கள் 'மனிதநேயம்' என்ற மதத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்து தத்துவம் அனைத்து உயிரினங்கள் மற்றும் இயற்கை மீதான அகிம்சையை போதிக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.