நீர் பாதுகாப்பு திட்டங்களில் முதல் இடம் பிடித்த தெலுங்கானாவுக்கு விருது அறிவிப்பு
சத்தீஷ்கார் 4.05 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 2-வது இடமும், ராஜஸ்தான் 3.64 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 3-வது இடமும் பிடித்துள்ளன.;
புதுடெல்லி,
நாட்டில் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களுக்கு மத்திய ஜலசக்தி துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மாநிலங்கள், மாவட்டங்கள், தொடர்புடைய அமைச்சகங்கள், என்.ஜி.ஓ.க்கள், ஆலைகள், நகராட்சி அமைப்புகள், நன்கொடையாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் என 100 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதில், தெலுங்கானா 5.2 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி முதல் இடம் பிடித்து உள்ளது. சத்தீஷ்கார் 4.05 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 2-வது இடமும், ராஜஸ்தான் 3.64 லட்சம் நீர் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் 3-வது இடமும் பிடித்துள்ளன.
வருகிற 18-ந்தேதி நடைபெறும் 6-வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த விருதுகளை வழங்குகிறார். வடக்கு மண்டலத்தில் உத்தர பிரதேசம் விருது பெறுகிறது. அதன் 3 மாவட்டங்களான மிர்சாபூர், வாரணாசி, ஜலான் ஆகியவை தலா ரூ.2 கோடி பரிசை பெறும்.
கிழக்கு மண்டலத்தில் சத்தீஷ்கார், தெற்கு மண்டலத்தில் தெலுங்கானா, மேற்கு மண்டலத்தில் மத்திய பிரதேசம், வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்களின் பிரிவுகளுக்கான மண்டலத்தில் திரிபுரா ஆகியவையும் இடம் பிடித்துள்ளன. இந்த விருதுகளுக்கு தமிழகம், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் 67 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. நீரின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப மாநிலங்கள் மற்றும் மக்கள் செயல்பட ஊக்குவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.