பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கிறது: ராகுல் காந்தி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகி இருக்கிறது. வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாக இருந்த போதிலும், நேரம் செல்லச் செல்ல இடைவெளி அதிகரித்தது.தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலை நிலவரம் ஏறுமுகமாகவும், இந்தியா கூட்டணியின் முன்னிலை நிலவரம் இறங்குமுகமாகவே இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளையும்விட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களில் முன்னிலை கிடைத்தன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தல் தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது. காங்கிரஸ் கட்சியும் , இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும்.என தெரிவித்துள்ளார் .