லடாக் மக்களின் குரலை நசுக்கும் பாஜக - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள 'லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையைத் தொடர்ந்து லே மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 5 பேருக்கு மேல் சாலைகளில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
அரசியல் போதையில் உள்ள பாஜக, மாநிலங்களை யூனியன் பிரதேசமாக்கி அதிகாரத்தை பறிக்கிறது. லடாக் மக்களின் குரலை பாஜக நசுக்கப்பார்க்கிறது. தற்போது லடாக்கில் நடக்கும் போராட்டம் நாளை நாடு முழுவதுமான போராட்டமாக மாறலாம். லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது தேசபக்தர்கள் லடாக் மக்களை ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.