டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசர அவசரமாக தரையிறக்கம்
விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர்.;
மும்பை,
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானம் பின்னர் கொச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டது.
காலை 9.31 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 157 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 163 பேர் பயணித்தனர். விமானம் மராட்டிய மாநில வான் எல்லையில் பறந்துகொண்டிருந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கொச்சி விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் மராட்டியத்தின் நாக்பூர் விமான நிலையத்தில் அவரச அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விமானம் முழுவதும் சோதனை நடைபெற்று வருகிறது.