100 அடி ஆழ கிணற்றில் விழுந்து சிறுவன் பலி
வீட்டின் அருகில் இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள டெர்னா என்ற கிராமத்தில் ரவி என்ற 5 வயது சிறுவன், தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகில் இருந்த 100 அடி ஆழ கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான்.
சிறுவன் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிகாரிகள், சுமார் 2 மணி நேரம் போராடி சிறுவனை கிணற்றுக்குள் இருந்து மீட்டனர்.
இதையடுத்து, உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவன் கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.