'ரீல்ஸ்' வீடியோவுக்கு காதலன் எதிர்ப்பு... கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் சவுபாக்யாவுக்கு தெரியவந்தது.;

Update:2025-06-25 05:32 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சைதன்யா (வயது 22). இவர் துமகூருவில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அழகு கலை நிபுணராகவும் இருந்து வந்தார். இதனால் அடிக்கடி வித்தியாசமாக 'ரீல்ஸ்' வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இந்தநிலையில் சைதன்யாவுக்கும், ராமேனஹள்ளியை சேர்ந்த விஜய் (25) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டாக அவர்கள் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் சைதன்யாவின் தாய் சவுபாக்யாவுக்கு தெரியவந்தது. அவர் சைதன்யாவை கண்டித்து வந்தார். ஆனால் சைதன்யா தனது தாய்க்கு தெரியாமல் விஜயுடன் பழகி வந்தார்.

இதற்கிடையில் சைதன்யா, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டு வந்தார். இது காதலன் விஜய்க்கு பிடிக்கவில்லை. அவர் சைதன்யாவை கண்டித்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சைதன்யாவை புகைப்பட கலைஞர் ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது தனது கேமராவில் சைதன்யாவை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொடுத்தார். அந்த புகைப்படத்தை சைதன்யா வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த விஜய், சைதன்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறு முற்றியதில் சைதன்யாவின் வீட்டுக்கு வந்த விஜய், அவரது தாயிடம் இதுகுறித்து கூறினார். இதனால் தாய் சைதன்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த சைதன்யா தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். இதனால் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதற்கிடையே விஜயிடம் செல்போனில் பேசிய சைதன்யா, தான் தற்கொலை செய்யப்போகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் சைதன்யா வீட்டுக்கு வந்தார். அவர் சைதன்யா இருந்த அறை கதவை திறக்குமாறு தட்டினார். ஆனால் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு மின்விசிறியில் சைதன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து விஜய், சைதன்யாவின் தாய் சவுபாக்யா ஆகியோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சைதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், 'ரீல்ஸ்' வீடியோ விவகாரத்தில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் சைதன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்