பிரகாச ஒளி, அளவில் பெரிய நிலவு... வானில் நடந்த அதிசயம்
சூப்பர் மூன் நிகழ்வின்போது, பூமியில் இருந்து 3.57 லட்சம் கி.மீ. தொலைவில் நிலவு இருக்கும்.;
புதுடெல்லி,
வானில் தோன்றும் நிலவு இன்று மாலை இயல்பை விட 14 சதவீதம் பெரிய அளவிலும், 30 சதவீதம் பிரகாசத்துடனும் ஜொலித்தது. இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் ஒளி நிறைந்த நிலவு நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது.
அது மாலை 6.49 மணியளவில் பிரகாசத்தின் உச்சம் தொட்டது. நவம்பர் சூப்பர் மூன் அல்லது பீவர் மூன் எனப்படும் நிலவு வானில் பெரிய அளவில் தோன்றும் அரிய நிகழ்வு நடப்பு ஆண்டில் உருவாக கூடிய 3 சூப்பர் மூன்களில் 2-வது சூப்பர் மூன் இதுவாகும்.
பூமிக்கு மிக நெருங்கிய தொலைவில் நிலவு இருக்கும்போது இதுபோன்ற சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது. இதன்படி பூமியில் இருந்து 3.57 லட்சம் கி.மீ. தொலைவில் நிலவு இருக்கும். இதனால், வழக்கத்திற்கு மாறாக அது பெரிய மற்றும் ஒளி நிறைந்து காணப்படும். இதனால் அது சூப்பர் மூன் என பெயர் பெறுகிறது.
உலகம் முழுவதும் இது தெரியும் என்றபோதும் இந்தியாவிலும் சூப்பர் மூனை மக்கள் காணலாம். இதன்படி, சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், ஆமதாபாத், லக்னோ, சண்டிகார் மற்றும் பாட்னா என பல்வேறு நகரங்களில் பருவநிலை சாதகத்துடன் காணப்பட்டால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், டெல்லியில் பனிப்புகை சூழ்ந்த சில பகுதிகளில் இதனை காண்பது தடைபடலாம்.