ஆபரேசன் சிந்தூர் நடந்த 6 மாதங்களுக்கு பின்... காஷ்மீரை தாக்க பயங்கரவாதிகள் புது சதி திட்டம்

இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது.;

Update:2025-11-05 20:06 IST

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை நடந்து 6 மாதங்கள் கடந்த நிலையில், புதிய வடிவிலான ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை சதி திட்டமிட்டு உள்ளன என அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பான உளவு தகவலின்படி, பயங்கரவாத குழுக்கள் ஊடுருவல், ஆயுத தளவாடங்களை எல்லை கடந்து கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் வழியேயான இந்த ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் சிறப்பு சேவை குழு உதவியுள்ளது. அதன் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் கூட ஆதரவளித்து உள்ளது.

Advertising
Advertising

இந்திய பகுதிகளை பயங்கரவாதி ஷாம்ஷெர் தலைமையிலான லஷ்கர்-இ-தொய்பா குழு, டிரோன்கள் உதவியுடன் வான்வழியே ஆய்வு செய்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் தாக்குதலுக்கு சாத்தியப்பட்ட இடைவெளி பகுதிகளை அடையாளம் காணுதல் ஆகியவை நடந்துள்ளன. இதனால், வருகிற வாரங்களில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன என உளவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மே 7-ந்தேதி இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை தரைமட்டம் ஆக்கப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் நடந்து 6 மாதங்களுக்கு பின்பு காஷ்மீரை தாக்க பயங்கரவாதிகள் புது சதி திட்டம் தீட்டியுள்ளது உளவு தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்