ஜி7 நாடுகள் கூட்டம்; மத்திய மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் கனடாவுக்கு பயணம்
ஜி7 நாடுகள் கூட்டத்தில் பாதுகாப்பு, வளங்கள் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் நயாகரா பகுதியில் வருகிற 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் ஜி7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுக்கான கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. கனடாவின் வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்த் இதற்காக அனைத்து ஜி7 நாடுகளின் தலைவர்களையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த கூட்டத்தில் உலகளாவிய சவால்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. இதுதவிர பாதுகாப்பு, வளங்கள் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கனடாவுக்கு அடுத்த வாரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனினும், அதற்கான சரியான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதில் தன்னுடைய அரசு முன்னேற்றம் கண்டுள்ளது என குறிப்பிட்டார். அமெரிக்காவுடனான மோதல் போக்கு தொடர்ச்சியாக, வர்த்தக ரீதியாக அந்நாட்டை சார்ந்திருத்தலை கனடா குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தி வருகிறது.
அதற்கேற்ப இந்தியாவின் வெளியுறவு துறையினருடன், கனடாவின் வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்த் மற்றும் அமைச்சரவையின் பிற உறுப்பினர்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் சமீபத்தில் கூறினார்.