வாக்கு திருட்டு விவகாரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு கிரண் ரிஜிஜு பதில்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரியும் பாஜக மூத்த நிர்வாகியுமான கிரண் ரிஜிஜு பதிலடி அளித்துள்ளார்.;

Update:2025-11-05 14:54 IST

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து இன்று (நவம்பர் 5) ராகுல் காந்தி நிருபர்களை சந்தித்தார். மத்தியில் ஆளும் பாஜக, தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்த வகையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராகுல் காந்தி கூறுகையில்: “அரியானாவில் 5 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டுள்ளன. மொத்த ஓட்டுகளில் 8-ல் ஒன்று போலியானது. 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 ஓட்டுக்கள் போலி வாக்காளர்களால் பதிவு செய்யப்பட்டவை. 93 ஆயிரத்து 174 ஓட்டுக்கள் போலியான முகவரிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

பல்க் வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) 19 லட்சம் பேர் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக்கணிப்புகள், அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் மாறி வந்தன. ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, முதல் மந்திரி வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி, ‘பாஜக கண்டிப்பாக அரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளை செய்து விட்டோம்’ என சிரித்தபடியே கூறினார். அந்த சிரிப்பின் பின்னால் மிகப் பெரிய சதி இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரியும் பாஜக மூத்த நிர்வாகியுமான கிரண் ரிஜிஜு பதிலடி  கொடுத்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது: “அரியானாவில் காங்கிரஸ் முகவர்களே எந்தப் புகாரும் அளிக்கவில்லை. முறைகேடு புகார்களைத் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் பலமுறை சரிபார்க்கப்பட்டது. ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார். தனது தோல்வி மற்றும் பலவீனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். வாக்கு திருட்டு எனக் கூறி இளம் வாக்காளர்களை தூண்டி விடுகிறார். தனது பலவீனங்களை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ராகுல் காந்தி பழி போடுகிறார். உண்மையான பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை கையாளுகிறார் ராகுல் காந்தி,” இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்