பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரூ.37 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட 97 ஆயிரத்து 500 செல்போன் 4ஜி கோபுரங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
புவனேஸ்வர்,
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டு, பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ‘சுதேசி’ 4ஜி சேவையை உருவாக்கி உள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த நிகழ்ச்சியில், சுதேசி 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதன்மூலம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்களைக் கொண்டு 4ஜி சேவையை உருவாக்கிய டென்மார்க், சுவீடன், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
இந்த சேவை, ‘கிளவுடு’ அடிப்படையிலானது. இதை எதிர்காலத்தில் 5ஜி சேவையாக தரம் உயர்த்தலாம். பிரதமர் மோடி ரூ.37 ஆயிரம் கோடி செலவில் ‘சுதேசி’ தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட 97 ஆயிரத்து 500 செல்போன் 4ஜி கோபுரங்களையும் தொடங்கி வைத்தார்.
4ஜி சேவை தொடக்கம் மூலம், எல்லைப்புறம், இடதுசாரி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் மிகவும் உட்புறப்பகுதிகளில் 26 ஆயிரத்து 700 கிராமங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். இவற்றில், 2 ஆயிரத்து 472 கிராமங்கள், ஒடிசா மாநிலத்தில் உள்ளன. 20 லட்சத்துக்கு மேற்பட்ட புதிய சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள். இந்த கோபுரங்கள், சூரிய மின்சாரத்தால் இயங்குபவை. இதன்மூலம், இவை இந்தியாவின் மிகப்பெரிய பசுமை தொலைத்தொடர்பு தலங்களாக மாறுகின்றன.