பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் மோடி கேரளா வருகிறார் - காங்கிரஸ் தாக்கு
பிரதமர் மோடியும், பாஜகவும் கேரளாவைப் புரிந்து கொள்ளவில்லை என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு வருவது வெட்கக்கேடானது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடுமையாக சாடி உள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி நேற்று கேரளாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை, ‘முஸ்லிம் லீக் மாவோயிஸ்டு காங்கிரஸ்’ என கூறியதுடன், மக்கள் அவர்களிடம் விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கேரளாவில் பா.ஜனதாவும், பிரதமர் மோடியும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘பிரதமர் மோடியும் பாஜகவும் கேரளாவைப் புரிந்து கொள்ளவில்லை. நாராயண குரு, அய்யன்காளி மற்றும் சட்டம்பி சுவாமிகள் ஆகியோரின் பூமியில், பன்முகத்தன்மையால் பெருமைப்படும் ஒரு மாநிலத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சியில், பிரதமர் தனது வழக்கமான வகுப்புவாத வெறியை தூண்டியிருக்கிறார். பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே பிரதமர் கேரளா வருகிறார்’ என பதிவிட்டு இருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் பா.ஜனதா மறைமுக கூட்டணியை ஏற்படுத்தி இருப்பதாக சாடியுள்ள அவர், ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெறும் என நம்பிக்கையும் தெரிவித்து உள்ளார்.