துணை ஜனாதிபதி தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.;
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.இதில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷணன், இந்தியாவின் துணை ஜனாதிபதியானார்.
மொத்த ஓட்டுகள் - 781
பதிவானவை - 767
செல்லாதவை - 15
சி.பி.ராதாகிருஷ்ணன் - 452
சுதர்சன் ரெட்டி - 300
இந்த தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற தேவையான இடங்கள் 377. அந்த வகையில் பெரும்பான்மைக்கும் கூடுதலாகவே சி.பி. ராதாகிருஷ்ணன் வாக்குகளைப் பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டின் தற்போதைய பலத்தின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மூலம் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11 எம்.பி.க்கள்) ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். இது தவிர சுயேச்சைகள் மற்றும் பிற நடுநிலை எம்.பி.க்களின் வாக்குகளைக் கணக்கிட்டால் அவருக்கு 449 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.
எதிரணியில் இந்தியா கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளைப் பெற்றார். சுதர்சன் ரெட்டி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார். செல்லாத 15 வாக்குகள், எதிர்க்கட்சிகளில் இருந்து பதிவாகியிருந்தாலும் கூட, சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட சில வாக்குகளை கூடுதலாகப் பெற்றார். இதன்படி பார்த்தால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்ததையே காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சியில் இருந்தோ அல்லது மராட்டியத்தின் உத்தவ் தாக்கரே சிவசேனா அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். என்று சொல்லப்படுகிறது.