ஏமனில் இந்திய நர்சுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைப்பு

ஏமனில் கொலை வழக்கில், இந்திய நர்சுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.;

Update:2025-07-15 14:45 IST

புதுடெல்லி,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது 38). இவர் ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014-ல் உள்நாட்டு போரால், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால், நிமிஷா பிரியாவால் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.

2015-ம் ஆண்டில் தலால் அப்தூ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனா நகரில் கிளினிக் ஒன்றை பிரியா நடத்த தொடங்கினார். அந்நாட்டின் குடிமக்களே கிளினிக் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடத்த அனுமதி உண்டு.

ஆனால், கிளினிக்கை ஆரம்பித்ததும் மஹ்தி, அனைத்து வருவாயையும் தனக்கு தரும்படி பிரியாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார். இதுபற்றி ஏனென்று கேட்டதற்கு, மஹ்தி மோதல் போக்கில் ஈடுபட்டு உள்ளான்.

இதன்பின்னர், போலியான ஆவணங்களை கொண்டு, தன்னை பிரியா திருமணம் செய்து கொண்டார் என மோசடியில் ஈடுபட்டதுடன், மிரட்டல் விடுத்தும், சித்ரவதை செய்தும் வந்துள்ளான்.

இந்த விவகாரத்தில் போலீசுக்கு போன நிமிஷாவுக்கு அநீதியே பரிசாக கிடைத்துள்ளது. போலீசார் பிரியாவை 6 நாட்கள் சிறையில் அடைத்தனர். சிறை கைதியாக இருந்து வெளிவந்த பின்னர் மஹ்தியின் கொடுமை அதிகரித்தது.

2017-ம் ஆண்டு ஜூலையில், கிளினிக் அருகே இருந்த சிறையின் வார்டனிடம் பிரியா, உதவி கேட்டுள்ளார். அதற்கு அவர், அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்கும்படி கேட்க யோசனை கூறியுள்ளார். ஆனால், மயக்க மருந்து செலுத்தப்பட்ட மஹ்திக்கு அதனை ஏற்று கொள்ளும் அளவுக்கு உடல்நிலை இல்லாத சூழலில் மரணம் அடைந்ததில், பிரியா வழக்கில் சிக்கினார்.

இதில், அவருக்கு விசாரணை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவருடைய மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. வழக்கில், அவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்