டெல்லி: விலையுயர்ந்த மது பாட்டில்களில் மலிவான மதுவை கலந்து விற்பனை - போலீஸ் வழக்குப்பதிவு

காலி பாட்டில்களில் புதிய ஸ்டிக்கர் ஒட்டி, மலிவான மதுவை கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.;

Update:2025-11-02 22:08 IST

புதுடெல்லி,

டெல்லி அரசின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள மதுக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மதுபாட்டில்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது அங்குள்ள ஒரு மதுக்கடையின் வாசலில் வாகனம் ஒன்றில் காலி மதுபாட்டில்கள் அடங்கிய பை ஒன்றை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த பாட்டில்கள் அனைத்தும் விலையுயர்ந்த மதுபான ரகங்களாக இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அருகில் இருந்த மதுக்கடைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 4 நபர்கள், காலி மதுபாட்டில்களில் மலிவான மதுபானம் மற்றும் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் இருந்து காலியான உயர்ரக மதுபான பாட்டில்களை வாங்கி, அதில் புதிய பார்கோடு ஸ்டிக்கர்களை ஒட்டி, மலிவான மதுவை கலந்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இது குறித்து கலால் துறை அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மதுக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்த மதுபாட்டில்கள் மற்றும் ஒரு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்