அசாம்: லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கவுகாத்தி,
மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அசாம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அசாமின் கசார் மாவட்டம் ரொங்க்பூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த லாரியை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் போதைப்பொருள், 90 ஆயிரம் மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த போதைப்பொருள், போதை மாத்திரையின் சந்தை மதிப்பு ரூ. 26 கோடி என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் கடத்தி வந்த கசார் மாவட்டத்தை சேர்ந்த தலிம் உதின் லஷ்கர், அபெத் சுல்தான் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.