உ.பி.: கடும் பனிமூட்டத்தால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - பலர் காயம்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லக்னோ,
உத்தரபிரதேசம், டெல்லி உள்பட வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தால் வெளிச்சமின்மை ஏற்பட்டு அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. அரியானா - உத்தரபிரதேசம் நெடுஞ்சாலையில் கிரேட்டர் நொய்டாவின் சக்ரசின்பூர் கிராமம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார்கள் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதியுள்ளன. இந்த கோர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.