அதிகரித்த திருட்டு சம்பவங்கள்: மோசமான சாதனை படைத்த இந்திய விமான நிலையம்.. எது தெரியுமா..?
திருட்டு சம்பவங்கள் அதிகம் நடந்த விமான நிலையங்களில் நாட்டிலேயே இந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.;
கோப்புப்படம்
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பதிவான திருட்டு வழக்கு தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத், நாக்பூர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதில் மற்ற விமான நிலையங்களில் தலா 1 திருட்டு வழக்கும், பெங்களூரு விமான நிலையத்தில் மட்டும் 9 வழக்குகளும் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவங்கள் அனைத்தும் விமான நிலையத்தில் நடந்ததும், அதில் 4 திருட்டு சம்பவங்கள் பயணிகள் சோதனைக்காக வரிசையில் காத்து நின்றபோது நடந்ததும் தெரியவந்தது. இதன்மூலம் இந்த மோசமான சாதனை பட்டியலில் பெங்களூரு விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து மந்திரி முரளிதர் மோகல் கூறுகையில், ‘நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை பெங்களூரு விமான நிலையத்தில் தான் 9 திருட்டு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. மற்ற விமான நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கு தான் பதிவாகி இருக்கிறது’ என்றார்.
இதுகுறித்து சிவில் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கூறுகையில், ‘விமான நிலையத்தில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம். தற்போது பெங்களூருவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.