ராஜஸ்தான்: ஆம்புலன்சில் உள்ள சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

குழந்தைக்கு ஆம்புலன்சில் உள்ள சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.;

Update:2025-12-13 13:23 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் பயனா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன் தினம் குழந்தை பிறந்தது. பிறந்து ஒரே நாள் ஆன பச்சிளம் குழந்தைக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு குழந்தையை மருத்துவமனைக்கு தந்தையும், உறவினரும் கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அந்த ஆம்புலன்சில் உள்ள சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அந்த ஆம்புலன்சில் செவிலியர் யாரும் பயணிக்கவில்லை. ஆம்புலன்ஸ் டிரைவர் மட்டுமே சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜெய்ப்பூரின் பஹ்சி நகர் அருகே சென்றபோது ஆம்புலன்சில் இருந்த சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துள்ளது. இதனால் சுவாசிக்க முடியாமல் பச்சிளம் குழந்தை மயங்கியுள்ளது. இதையடுத்து, பஹ்சி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை ஆம்புலன்ஸ் டிரைவர் கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். அதேவேளை, ஆம்புலன்ஸ் சிலிண்டரில் ஆக்சிஜன் இல்லாததே குழந்தை உயிரிழப்புக்கு காரணம் என்று உயிரிழந்த குழந்தையின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்