மனைவி, 2 குழந்தைகளை கொன்று புதைத்த வனத்துறை அதிகாரி.. காணாமல் போனதாக நாடகம்..!
விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால், சந்தேகமடைந்த போலீசார் அவரை கைது செய்தனர்.;
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சைலேஷ் கம்பாலா. பாவ் நகரில் உதவி வனப்பாதுகாப்பு அதிகாரி யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் சூரத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி சைலேஷின் மனைவி 2 குழந்தைகளுடன் சூரத்திலிருந்து பாவ் நகருக்கு வந்தார். விடுமுறையை மகிழ்ச்சியாக அவர்கள் கொண்டாடினர். மீண்டும் சூரத் நகருக்கு செல்ல விருந்த தன் மனைவியை தாயாருடன் தங்கும் படி சைலேஷ் கூறினார்.
நாம் இதுகுறித்து பலமுறை விவாதித்து விட்டோம். என்னால் உங்கள் தாயோடு தங்க முடியாது. தனிக்குடித்தனத்தில் வாழ்வதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவரின் மனைவி மறுத்தார். இது இருவருக்கும் இடையில் வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சைலேஷ் அவரது மனைவியை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தான் தாக்கியதால் மனைவி உயிரிழந்ததை 2 குழந்தைகளும் பார்த்து விட்டதை உணர்ந்த சைலேஷ் எங்கே இதை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் அந்த 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் 3 பேரின் உடல்களையும் யாருக்கும் தெரியாமல் தனது குடியிருப்பிற்கு அருகில் உள்ள காலியான இடத்தில் புதைத்தார்.
சில நாட்கள் கழித்து புதைத்த இடத்திலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த சைலேஷ் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து மனைவி மற்றும் 2 குழந்தைகளும் காணாமல் போனதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக சைலேஷ் பதிலளித்தார். இதில் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார், அவர் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்தினர். இதில் ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த போலீசார். அந்த இடத்தை தோண்டினர். அங்கு அழுகிய நிலையில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் பிணத்தை கண்டெடுத்தனர். இதையடுத்து சைலேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.