இந்தூரில் விஷமாக மாறிய குடிநீர்; உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு - ராகுல் காந்தி

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவையும் போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-17 14:46 IST

இந்தூர்,

இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரம் என்று பாராட்டப்பட்ட மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் குடிநீரே விஷமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தூரில் உள்ள பாகீரத்புராவில், கடந்த மாதம் சுமார் 1,400 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட பகுதியில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பாகீரத்​புரா பகு​தி​யில் ஒரு பொதுக் கழிப்​பறைக்கு அடி​யில் சென்ற குடிநீர் குழா​யில் கசிவு ஏற்​பட்​ட​தில் குடிநீருடன் கழி​வுநீர் கலந்​துள்​ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு பொறியாளர் பணீநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்தூரில் குடிநீர் விஷமாக மாறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இன்று பாகீரத்புராவிற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“சுத்தமான குடிநீர் என்பது பொது உரிமை. இந்தூர் ஒரு ஸ்மார்ட் நகரம். ஆனால் சுத்தமான குடிநீர் கூட இல்லை. மக்கள் மிரட்டப்படுகிறார்கள். மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதும் மாசுபாட்டைக் குறைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை.

இது இந்தூரை மட்டும் பற்றியது அல்ல. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இது நடக்கிறது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் இந்தூரில் மக்கள் அசுத்தமான தண்ணீரைக் குடித்து இறந்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவையும் போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.

இந்தூரில் ஏற்பட்ட குடிநீர் பேரழிவிற்கு அரசாங்கத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். மேலும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பாகும். மக்கள் வேதனையில் இறந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் பகீரத்புராவின் மக்களுடன் நிற்கிறோம். குற்றவாளிகளைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யவும் தொடர்ந்து போராடுவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்