போலந்து துணை பிரதமர் இன்று இந்தியா வருகை

இந்தியாவுக்கு இன்று வரும் போலந்து துணை பிரதமர் வருகிற 19-ந்தேதி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுவார்.;

Update:2026-01-17 08:15 IST

புதுடெல்லி,

போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், போலந்து துணை பிரதமர் ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதன்பின்பு, நாளை நடைபெற உள்ள ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வார். இதன் பின்னர் அன்றைய தினமே டெல்லிக்கு செல்வார்.

வருகிற 19-ந்தேதி மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுவார். இதன்பின்னர், டெல்லியில் இருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்வார்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்டில் போலந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்தியா மற்றும் போலந்து நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டதுடன், அதனை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, எதிர்கால மூலோபாய கூட்டாண்மையை செயல்படுத்துவதற்கான இருதரப்பு கூட்டாண்மை மற்றும் 2024-2028 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் ஆகியவை பற்றிய கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வெளிப்படையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தில் இந்தியா உள்ளது. இந்த சூழலில், போலந்து துணை பிரதமர் சிகோர்ஸ்கியின் வருகை அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்