பா.ஜ.க.வின் அடுத்த தேசிய தலைவர் யார்..? 20-ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

பா.ஜ.க. தேசிய தலைவராக முக்கிய புள்ளியான இவர், 20-ந் தேதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.;

Update:2026-01-17 07:58 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பா.ஜனதா தேசிய தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதா தேசிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததால், பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய தேசிய செயல் தலைவராக பீகார் மாநில மந்திரி நிதின் நபின் சில வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பா.ஜனதா அமைப்பு தேர்தலுக்கான கால அட்டவணையை பா.ஜனதா தேசிய தேர்தல் நடத்தும் அதிகாரி கே.லட்சுமணன் வெளியிட்டார்.

அதன்படி, பா.ஜனதா தேசிய தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 19-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 2 மணி முதல் 4 மணிவரை மனுக்கள் தாக்கல் செய்யலாம். அன்று மாலை 4 மணி முதல் 5 மணிவரை, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற மாலை 5 மணி முதல் 6 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால், 20-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். அதே நாளில், புதிய தேசிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா தேசிய செயல் தலைவர் நிதின் நபினை தவிர, வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை. அவருக்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் ஆதரவு உள்ளது. எனவே, அவர் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு 20-ந் தேதி வெளியாகிறது.

தற்போதைய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம், செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யார் இந்த நிதின் நபின்.?

புதிய தலைவராக போகும் நிதின் நபினுக்கு வயது 45. அவர் பழம்பெரும் பா.ஜனதா தலைவர் நபின் கிஷோர் பிரசாத்தின் மகன் ஆவார். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர். பீகாரில் 2 தடவை மந்திரியாக இருந்துள்ளார். கட்சியிலும், கொள்கையிலும் ஆழ்ந்த பற்று கொண்ட ஆற்றல்மிகு தலைவராக பா.ஜனதாவினரால் பார்க்கப்படுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்