வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
இந்த ஆண்டு இறுதிக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 12 என்ற எண்ணிக்கையில் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.;
கொல்கத்தா,
நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரெயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரெயில் நிலையம் வரை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 958 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரெயில் சேவை வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 958 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் கடக்கிறது.
நாட்டின் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் ரெயிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய 3-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,299, 2-டைர் ஏசி பெட்டிக்கு ரூ.2,970 மற்றும் முதல் ஏசி பெட்டிக்கு ரூ.3,640 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ஜிஎஸ்டி சேர்க்கப்படவில்லை. பயணிகள் டிக்கெட் எடுக்கும் போது ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இந்த ரெயிலில் 3-டைர் ஏசி பெட்டிகள் 11, 2-டைர் ஏசி பெட்டிகள் 4, முதல் ஏசி பெட்டி ஒன்று என மொத்தம் 16 நவீன பெட்டிகள் இடம்பெற்றுள்ளன.