கேரளாவில் போதைப்பொருள் வினியோகம் - பல் மருத்துவ மாணவி உள்பட 7 பேர் கைது
எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாணவர்கள்- இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் போதைப்பொருட்கள விற்பனையை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் போதைப்பொருட்கள் விற்பனையின் முக்கிய குற்றவாளியான அசிம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்யார் அணை அருகே உள்ள சோதனைச்சாவடி யில் போதைப்பொருள் தடுப்பு குழு சப்-இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றார்.
அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் அசிமின் செல்போன் கனியாபுரம் தோப்பில் பகுதியை காண்பித்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று, அசிம் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு அசிம் மட்டுமின்றி, போதைப்பொருட்கள் விற்பனையில் மற்றொரு முக்கிய குற்றவாளியான அஜித் உள்பட 6 பேரும் இருந்தனர்.
அசிம் மற்றும் அஜித்துடன் கிழக்கு கோட்டா அட்டக் குளங்கரை பகுதியை சேர்ந்த டாக்டர் விக்னேஷ் தத்தன்(வயது34), பி.டி.எஸ். மருத்துவ மாணவியான கொட்டாரக் கரையை சேர்ந்த ஹலினா(27), பலோடு பகுதியை சேர்ந்த அன்சியா (37), ஐ.டி. ஊழியரான கொல்லம் ஆயூரை சேர்ந்த அவினாஷ்(27), கொல்லம் இலமாடு ஹரிஷ் (29) ஆகியோரும் இருந்தனர்.
அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 10 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.