தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களா? - திட்டவட்டமாக மறுத்த டெல்லி அரசு
தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை வெளியாகி இருந்தது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
தேசிய தலைநகர் முழுவதும் தெருநாய்களைக் கணக்கிடுவதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் பணியில் ஈடுபடுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் சுற்றறிக்கை ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுபோன்ற எந்த உத்தரவையும் சுற்றறிக்கையின் வாயிலாக டெல்லி அரசின் கல்வித்துறை பிறப்பிக்கவில்லை என்றும், ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி இயக்குனரகம் சார்பில், டெல்லி சிவில் லைன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், தவறான நோக்கத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் விதமாகவும், கல்வித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கும் வேண்டுமென்றே இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் டெல்லி சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.