விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம்

விபத்துகளை தடுக்க தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டு விருப்பம் தெரிவித்துள்ளது.;

Update:2025-12-16 06:23 IST

புதுடெல்லி,

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், நெடுஞ்சாலையில் உணவகம் ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மகேஷ்வரி, விஜய் பிஸ்னோய் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுக்சாலைகளின் இருபுறமும் அமைக்கப்படும் சட்ட விரோத ‘தாபா’க்களால் அதிக விபத்துகள் நடப்பதாக நீதிபதிகள் சாடினர். மேலும் இதுபோன்ற உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சட்டப்பூர்வ விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் சமர்ப்பிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டனர்.

பின்னர் நீதிபதிகள், பலோடி போன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும், சட்ட விதிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அவற்றின் அமலாக்கத்தை உறுதி செய்வதற்கும் வழிகாட்டுதல்களை வகுக்க கோர்ட்டு விரும்புகிறது என்றனர். இது தொடர்பாக கோர்ட்டு நியமித்திருக்கும் நீதிமன்ற நண்பருக்கும், சொலிசிட்டர் ஜெனரலுக்கும் இடையேயான கலந்துரையாடலுக்குப் பிறகு, அவர்களால் தீர்க்கப்பட்ட சிக்கல்கள் குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன்மூலம் வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும் எனக்கூறினர்.

இதற்கிடையே உண்மையான சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கக்கூடிய கூகுள் படங்களை பரிமாறிக்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.

முன்னதாக துஷார் மேத்தா தனது வாதத்தில், சட்டவிரோத தாபாக்களையும், உணவகங்களையும் அகற்றும் அதிகாரம் எங்களிடம் உள்ளது, ஆனால் அந்த அதிகாரம் பொதுவாக உள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் அவரது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர், அந்த அதிகாரம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இல்லை. எனவே, நாம் ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்