பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்

முக்கிய சுற்றுலா தளங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;

Update:2025-04-29 11:49 IST

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 48 முக்கிய சுற்றுலா தளங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதைக் கருத்தில் கொண்டு காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தளங்களில் 48 தற்போது மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதில் முக்கியமாக தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சாபல், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் டோசமைதான் ஆகியவை அடங்கும். அதிகாரிகள் இது குறித்து முறையான உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றாலும், இந்த இடங்களுக்கான நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் நாட்களில் மேலும் சில சுற்றுலா தளங்கள் மூடப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்