இன்ஸ்டாகிராமில் பிரபலமான மாடல் அழகி ரூ.40 கோடி மோசடி
ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.22 கோடி வீட்டுக்கடன் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.;
புதுடெல்லி,
சந்தீபா விர்க் என்ற இளம்பெண் மாடல் அழகி போல காட்சியளிக்கும் இவர் தன்னை ஒரு நடிகை மற்றும் தொழில்முனைவோர் என இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்து கொண்டார். இன்ஸ்டகிராமில் 1.2 மில்லியனுக்கு அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள். சந்திப்பா விர்க் தான் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறி ஆன்லைன் முகவரி ஒன்றை வெளியிட்டார். மேலும் தனியார் நிறுவன அழகு சாதனபொருட்கள் குறித்த விளம்பர படங்களையும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதன்மூலம் பல கோடி மோசடி செய்தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மொஹலியில் புகாரின் பேரில் சந்திபா விக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் தவறான காரணங்களை கூறி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனி நபர்கள் பலரை ஏமாற்றி அவர் மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சந்தீபா விக் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியது. மேலும் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பல இடங்களில் சோதனை நடத்தினர். இதில் சந்திபா விக் ரூ.40 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேபிடல் மிமிடெட்டின் முன்னாள் இயக்குனர் அங்கரை நடராஜன் சேதுராமனுடன் சந்தீபா விக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனைதொடர்ந்து சேதுராமனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் விசாரணையில் ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.22 கோடி வீட்டுக்கடன் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 18 கோடி மதிப்புள்ள பொது நிதி ஒழுங்கற்ற கடன் விதிமுறைகளின் கீழ் சேதுராமனுக்கு வழங்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இந்த நிதியில் பெரும்பகுதிகள் மோசடி செய்யப்பட்டு செலுத்தப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மோசடியில் சந்தீபா விக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து சந்தீபா விக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நாளை வரை காவலில் வைக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அவரிடம் மோசடி தொடர்பாகவும் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.