ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது: பனோலிக்கு நடிகை கங்கனா ஆதரவு
பனோலி, தன்னுடைய அநாகரீக பதிவுக்காக மன்னிப்பு கோரி விட்டார். விரைவில் அவரை விடுவிக்க வேண்டும் என கங்கனா கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
அரியானாவின் குருகிராம் நகரை சேர்ந்தவர் ஷர்மிஷ்டா பனோலி. புனே சட்ட பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மாணவியான இவர், இன்ஸ்டாகிராமிலும் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 94 ஆயிரம் பேர் இவரை பின்தொடர்வோராக உள்ளனர்.
அவர் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பற்றி பாலிவுட் நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர் என்று பகிர்ந்து உள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது. அவரை விமர்சித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அவரை அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதனால், அவர் அந்த வீடியோவை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். மன்னிப்பும் கோரினார்.
எனினும், கொல்கத்தாவில் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பனோலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் பயந்து போன அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். அவருக்கு எதிராக, கைது வாரண்ட் ஒன்றை கோர்ட்டு பிறப்பித்தது. இந்த சூழலில் அவரை நேற்று முன்தினம் இரவு குருகிராமில் வைத்து, போலீசார் கைது செய்தனர்.
அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ, மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்ற வகையிலும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பனோலியை கைது செய்தது பற்றி, நடிகை கங்கனா ரணாவத் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஒருவரை துன்புறுத்துவது சரியல்ல. எப்போது ஒருவர் மன்னிப்பு கேட்டு, அவர் வெளியிட்ட பதிவை அழித்து விட்டாரோ, பின்னர் அவரை சிறையில் அடைத்து, துன்புறுத்துவது, அவருடைய வாழ்க்கையையே முடிப்பது மற்றும் அவருடைய பண்புகளை பற்றி கேள்வி எழுப்புவது என்பது தவறானது.
எந்தவொரு மகளுக்கும் இது நேர்ந்திட கூடாது. மேற்கு வங்காளம், வடகொரியா போல் மாறாமல் மாநில அரசு பார்த்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. அவர் அநாகரீக பதிவுக்காக மன்னிப்பு கோரி விட்டார். விரைவில் அவரை விடுவிக்க வேண்டும். ஏனெனில் அவர் இளம்பெண். அவருக்கென்று முழுமையாக வாழ்க்கையும், வேலையும் காத்திருக்கிறது என்றும் பனோலிக்கு ஆதரவாக கங்கனா பேசியுள்ளார்.