ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி
ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார். மனைவி மற்றும் உறவினர் காயமடைந்தனர்.;
File image
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பெஹிபாக் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் மன்சூர் அகமது வாகை, அவரது மனைவி மற்றும் உறவினர் மீது இன்று மதியம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் அவர்கள் மூவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மன்சூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினர் இருவரது நிலை தற்போது சீராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் அம்மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.