பண்டிகை கால சலுகை; ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி - ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு
பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கட்டண சலுகையை அறிவித்து உள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் இந்த மாதம் முதல் ஆண்டு இறுதி வரை பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதற்காக வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். எனவே இந்த நாட்களில் ரெயில்களில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும்.
இந்த காலத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு கட்டண சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வருவதற்கான ரெயில் டிக்கெட் விலையில் 20 சதவீத தள்ளுபடியை ரெயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதன்படி அக்டோபர் 13 முதல் 26-ந்தேதி வரை ஒரு வழி பயணம் மேற்கொள்பவர்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை அதே ரெயில்களில் திரும்புவதற்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்தால், அந்த திரும்பும் பயணத்துக்கான கட்டணத்தில் 20 சதவீத சலுகை பெற முடியும்.
இந்த கட்டண சலுகை ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரெயில்களுக்கு பொருந்தாது. இவற்றை தவிர மீதமுள்ள அனைத்து வகையான பயணிகள் ரெயில்களிலும் இந்த 20 சதவீத டிக்கெட் கட்டண தள்ளுபடியை பெற முடியும் என ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
“அக்டோபர் 13-ந்தேதி முதல் 26-ந்தேதிக்கு இடையே ஒரு வழி பயணத்தை முன்பதிவு செய்துவிட்டு, பின்னர் இணைப்பு வசதி மூலம் அதே ரெயிலுக்கு நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ந்தேதிக்கு இடையே திரும்பி வரும் பயணத்துக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான முன்பதிவு, முன்கூட்டியே முன்பதிவு செய்யும் காலத்தின் அடிப்படையில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அதேநேரம் அக்டோபர் 13 முதல் 26-ந்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் திரும்பி வரும் பயணத்துக்கான டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இந்த திட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் புறப்பாடு மற்றும் திரும்பி வருவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இரு பயணத்திலும் பயணிகள், ரெயில், வகுப்பு, புறப்படும்-சேரும் இடங்கள் (இருவழி) அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.
இரு வழிகளிலும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கே இந்த கட்டண சலுகை கிடைக்கும். திரும்ப வரும் டிக்கெட்டின் அடிப்படை கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடி திட்டத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது.”
இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.