கோவா இரவு விடுதியின் இணை உரிமையாளர் நள்ளிரவில் கைது
தீ விபத்தில் 25 பேர் உயிரை காவு வாங்கிய கோவா இரவு விடுதியின் இணை உரிமையாளர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார்.;
கோவா,
கோவா மாநிலத்தின் வடபகுதியில் அர்போரா கிராமத்தில் ‘ரோமியோ லேன்’ என்ற இரவு விடுதி உள்ளது. தலைநகர் பனாஜியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். அதற்குள் தீவிபத்தில் 25 பேர் பலியானார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சமையல் கூட ஊழியர்கள் ஆவர். 3 பெண்களும் பலியானார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள அந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் மற்றும் சவுரப் லுத்ரா இருவரும் வீட்டில் இல்லை. இதனையடுத்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் இருவரும் வெளிநாடு தப்பி விட்டனர். தாய்லாந்தில் இருவரும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கோவா இரவு விடுதியின் இணை உரிமையாளராக இருந்த அஜய் குப்தா என்பவரை போலீசார் இரவில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இரவு விடுதியின் மேனேஜர் ராஜீவ் மோடக், மேனேஜர் விவேக் சிங், பார் மேனேஜர் ராஜீவ் சிங்கானியா, கேட் மேனேஜர் ரியான்ஷு தாக்குர், ஊழியர் பாரத் கோலி என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6-வது நபராக அஜய் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார்.