பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3-ம் வகுப்பு மாணவி.. பஸ் டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த விபரீதம்
மாணவி பள்ளி பஸ்சில் இருந்து இறங்கி செல்வதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியது தெரிய வந்துள்ளது.;
பீதர்,
கர்நாடக மாநிலம் பீதர் அருகே ஜன்வாடா கிராமத்தில் தனது பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி ருத்வி (வயது 8). இவர் பீதரில் உள்ள குருநானக் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தாள். மாலையில் பள்ளி முடிந்து அதே பள்ளிக்கூட பஸ்சில் ருத்வி வீட்டுக்கு திரும்பினாள்.
அவளது வீட்டு அருகே மாணவி, பள்ளிக்கூட பஸ்சில் இருந்து இறங்கினாள். அந்த சமயத்தில் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கினார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ருத்வி பள்ளிக்கூட பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினாள். இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் ருத்வி போராடினாள். உடனே அப்பகுதி மக்களும், சிறுமியின் பெற்றோரும் அங்கு ஓடி வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ருத்வியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி ருத்வி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பீதர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ருத்வி பள்ளி பஸ்சில் இருந்து இறங்கி செல்வதை கவனிக்காமல் அஜாக்கிரதையாக பஸ்சை வேகமாக இயக்கியதும், இதில் சிறுமி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.