திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள்.. உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

டோக்கன் தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு தெரிவித்தார்.;

Update:2025-12-10 14:39 IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு தரிசனம், பக்தர் கூட்ட நெரிசல், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் சேவை வசதிகள் குறித்து திருமலை அன்னமையா கூடத்தில் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் - பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு பேசியதாவது:-

வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகமான பக்தர்கள் கூடும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தேவையான ஊழியர்கள், கூட்டநெரிசல் கட்டுப்பாட்டு குழுக்கள், போக்குவரத்து கண்காணிப்பு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும். லட்டு வழங்கும் மையங்களில் நெரிசலை தவிர்க்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

டோக்கன் தருவதாக பக்தர்களை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். டிரோன்கள் மூலம் கூட்டம் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராமகிருஷ்ணா, ராமகிருஷ்ணச்சாரி, ஸ்ரீநிவாசுலு, குலசேகர், ஸ்ரீநிவாசராவ், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடநாராயணா, பிரசாத், விஜய்ஷேகர், சந்திரசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், விஜிலன்ஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்