அரசு பேருந்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தல் - இருவர் கைது
தங்கத்தை கடத்தி வந்த 2 பேரையும் கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் சோதனை சாவடி உள்ளது. இப்பகுதி தமிழக எல்லையில் உள்ளது. இந்த சோதனை சாவடியில் கலால் துறையினர், போலீசார் வாகன சோதனை நடத்தி, கடத்தி வரப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வாளையார் சோதனை சாவடியில் கலால் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து கொட்டாரக்கரை நோக்கி கேரள அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை கலால் துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில் இருந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் வைத்திருந்த உடைமைகளில் சோதனை நடத்தினர். அதில் தங்க கட்டிகள் அதிகமாக இருந்தன. இதுகுறித்து கலால் துறையினர் விசாரணை நடத்தியதில், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் மும்பையை சேர்ந்த சங்கித் அஜய் ஜெயின் (வயது 28), ஹிதேஷ் சிவராம் சேலங்கி (23) ஆகியோர் என்பதும், ஆவணங்கள் இன்றி தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
பின்னர் 2 பேரையும் கலால் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்பிலான 8 கிலோ 696 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவை ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.