மத்திய வர்த்தக மந்திரி நாளை மறுதினம் அமெரிக்கா பயணம்

இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.;

Update:2025-09-20 21:54 IST

டெல்லி,

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குதை இந்தியா நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் தங்கி வேலை செய்துவரும் வெளிநாட்டினருக்கு எச்1-பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இந்த விசாக்களுக்கான கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியுள்ளார். அதன்படி, எச்1-பி விசாக்களுக்கான கட்டணமாக 1 லட்சம் டாலர்கள் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சத்து ஆகும். அமெரிக்காவில் எச்1-பி விசா வைத்துள்ளவர்கள் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவார். டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்தியா, அமெரிக்கா உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரண்டன் லிண்ட்ச் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்குமுன் இந்தியாவுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய வணிகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் லிண்ட்ச் தலைமையிலான அமெரிக்க குழுவும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் நாளை மறுதினம் (22ம் தேதி - திங்கட்கிழமை)  அமெரிக்கா செல்கிறார். பியூஷ் கோயல் தலைமையில் அமெரிக்கா செல்லும் குழுவில் மத்திய வணிகத்துறை சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் உள்பட மூத்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த பயணத்தின்போது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரியை குறைக்க அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. மேலும், எச்1-பி விசா விவகாரத்தில் எழுந்துள்ள பிரச்சினை குறித்தும் அமெரிக்க அதிகாரிகளிடம் பியூஷ் கோயல் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்