மேம்பாலத்தில் இருந்து சுரங்கப்பாதையில் கார் பாய்ந்து விபத்து: 4 பக்தர்கள் பலி

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது.;

Update:2025-11-25 05:12 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா அப்பேனஹள்ளி கிராமம் வழியாக ஒரு கார் நேற்று அதிகாலை வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் அப்பகுதியில் மேம்பாலத்தில் ஏறி வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி மேம்பால தடுப்புச்சுவரில் மோதி சுமார் 50 அடி ஆழ சுரங்கப்பாதைக்குள் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் ெநாறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு போராடியபடி கிடந்த அவர்களை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் பலியானவர்கள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பலியானவர்கள் கோபி (வயது 38), ரமேஷ் (28), ஹரிஹரன் (27), ஜெய்சங்கர் (30) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருந்தனர்.

இதையொட்டி அவர்கள் காரில் புறப்பட்டு கோலார், பெங்களூரு, மைசூரு வழியாக கேரளா செல்ல வந்ததும், அப்போது அவர்களது கார் மேம்பால தடுப்புச்சுவரில் மோதி சுரங்கப்பாதையில் பாய்ந்து கவிழ்ந்ததும், இதில் 4 பேர் பலியானதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கார் விபத்தில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்