குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

பாலம் இடிந்து விழுந்த இடத்தில் நேற்றும் மீட்பு பணி நடைபெற்றது.;

Update:2025-07-11 06:49 IST

வதோதரா,

குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

நேற்று முன்தினம் அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் அந்த பாலம் வழியாக சென்ற 6 வாகனங்கள் ஆற்றில் விழுந்தது. இதில் 13 பேர் பலியானார். நேற்று மேலும் 5 பேர் உடல் மீட்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவ இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இரண்டு பேர் மாயமாகி உள்ளதால் நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது.

என்டிஆர்எப் மற்றும் எஸ்டிஆர்எப் குழுக்கள் ஆற்றில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அடர்த்தியான சேறும், மழையும் இந்த மீட்புப்பணியை கடினமாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு சில வாகனங்கள் இன்னும் ஆற்றில் மூழ்கி கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. அது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், குஜராத் பா.ஜனதா ஆட்சியின் ஊழல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது முதல் முறையல்ல கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்துள்ளன. அவை குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும். விபத்துக்கு பொறுப்பேற்று முதல்-மந்திரி பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும். இல்லையென்றால், காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்